எலக்ட்ரிக்கல் கடையில் நூதன திருட்டு; 2 வாலிபர்கள் கைது
வள்ளியூரில் எலக்ட்ரிக்கல் கடையில் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர்:
வள்ளியூரில் எலக்ட்ரிக்கல் கடையில் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நூதன திருட்டு
வள்ளியூர் அருகே உள்ள நல்லான்குளத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 45). இவர் வள்ளியூர் வடக்கு மெயின் ரோட்டில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் காலையில் டிப்-டாப்பாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கடையில் மின் மோட்டார் மற்றும் பொருட்கள் வாங்கியுள்ளனர். பொருட்களுக்கான 29 ஆயிரத்து 500 ரூபாயை நெட்பேங்கிங் மூலமாக அனுப்புவதாக கூறியுள்ளனர்.
பின்பு இணையதள வசதி கிடைக்காததால் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருவதாக கூறி, கடை உரிமையாளர் ராஜேசின் கவனத்தை திசை திருப்பிவிட்டு வாங்கிய பொருட்களுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின்பேரில் வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரனை மேற்கொண்டதில், நெல்லை டவுன் மகிழ்வண்ணநாதபுரத்தை சேர்ந்த சாகுல்ஹமீது மகன் செய்யது முகமது இஸ்மாயில் (வயது 25), கோயம்புத்தூர் சூலூரை சேர்ந்த தேவதுணை மகன் பிளஸிங் சாம் (21) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, மின் மோட்டார் மற்றும் பொருட்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரும் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பல இடங்களில் இதேபோன்று நூதன திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.