பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் குதித்து ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் தற்கொலை
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்து ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிபாளையம்:
ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனியை சேர்ந்தவர் விஜய் என்கிற விஜயகுமார் (வயது 39). இவர் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வந்தார். இவருக்கு கீதா என்ற மனைவியும், ரூபா (16), சுபா (11) ஆகிய மகள்களும் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை விஜயகுமார் வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிபாளையம் வந்தார். காலை 9 மணிக்கு மோட்டார் சைக்கிளை காவிரி பாலத்தின் ஓரமாக நிறுத்தினார். அதில் இருந்து இறங்கிய அவர் திடீரென பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் குதித்தார்.
ஆற்றில் மூழ்கி சாவு
அந்த வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக பள்ளிபாளையம் போலீசார், வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
பரிசல் ஓட்டிகள் உதவியுடன், தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் விஜயகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு தீயணைப்பு வீரர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
காரணம் என்ன?
ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் விஜயகுமார் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளிபாளையத்தில் பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் குதித்து ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.