நாமக்கல் மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டு விவசாயத்துக்கு ரூ.4,329 கோடி கடன் வழங்க இலக்கு-கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் விவசாயத்துக்கு ரூ.4,329 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறினார்.

Update: 2021-11-12 18:19 GMT
நாமக்கல்:
வங்கியாளர்கள் கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். இதில் 2022-2023-ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசியதாவது:-
நபார்டு வங்கியின் 2022-2023-ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையில் நாமக்கல் மாவட்டத்திற்கு முன்னுரிமை கடனாக ரூ.7,820.24 கோடி வழங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 7.46 சதவீதம் கூடுதலாகும். இதில் பயிர் கடனாக ரூ.2,773.77 கோடியும், விவசாய முதலீட்டு கடனாக ரூ.1,284.17 கோடியும், விவசாய கட்டமைப்பு கடனாக ரூ.92.53 கோடியும், விவசாய இதர கடன்களாக ரூ.179.26 கோடியும் என விவசாயத்திற்கான மொத்த கடன் மதிப்பீடாக ரூ.4,329.73 கோடியை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ரூ.7,820 கோடி
மேலும் சிறு குறு நடுத்தர தொழில் கடனாக ரூ.1,122.96 கோடியும், ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடனாக ரூ.795.62 கோடியும், அடிப்படை கட்டுமான வசதி கடனாக ரூ.97.50 கோடியும், சுய உதவிக்குழு மற்றும் கூட்டு பொறுப்புக்குழுக்கான கடனாக ரூ.1,418.88 கோடியும் என மொத்தம் ரூ.7,820.24 கோடி அளவுக்கு மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதுபோன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும்.
இவ்வாறு கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசினார்.
இதில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ரமேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஷ்குமார் மற்றும் வங்கி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்