திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாய நிலப்பரப்பை 8 ஆயிரம் ஏக்கராக அதிகரிக்க நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 ஆயிரம் ஏக்கராக இருக்கும் விவசாய நிலங்களை 8 ஆயிரம் ஏக்கராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 ஆயிரம் ஏக்கராக இருக்கும் விவசாய நிலங்களை 8 ஆயிரம் ஏக்கராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.
குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை
மாவட்டத்தில் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. அதனை 8 ஆயிரம் ஏக்கராக விரிவுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 49 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் 285 ஏரிகளும், 269 குளம், குட்டைகளும் உள்ளன. இவற்றில் எந்தெந்த ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை என்று கண்டறிந்து அதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நீர்வழிப்பாகைளில் ஆக்கிரமிப்பு செய்து அங்கு வாழும் மக்களை கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கு பிரதம மந்திரி குடியிருப்பு வழங்கும் திட்டத்தில் வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சிறப்பு முகாம்
மாவட்டத்தில் உள்ள அனைத்து பிர்காவிலும் விவசாயிகளுக்கு விவசாயக்கடன் மற்றும் பயிர்க்கடன் பெறுவதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து 7 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரிஹரன், தோட்டக்கலை துணை இயக்குனர் பார்த்திமா, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் முனிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.