ஆம்பூரில் சுவர் இடிந்து விழுந்து விவசாயி பலி

ஆம்பூரில் சுவர் இடிந்து விழுந்து விவசாயி பலியானார். வாணியம்பாடி உழவர் சந்தையில் 2 பேர் காயமடைந்தனர்.

Update: 2021-11-12 18:12 GMT
ஆம்பூர்

ஆம்பூரில் சுவர் இடிந்து விழுந்து விவசாயி பலியானார். வாணியம்பாடி உழவர் சந்தையில் 2 பேர் காயமடைந்தனர்.

விவசாயி பலி

ஆம்பூரை அடுத்த தோட்டாளம் பகுதியை சேர்ந்தவர் உமாபதி (வயது 50) விவசாயி. இவர் நேற்று அதே பகுதியில் உள்ள மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தொடர் மழை காரணமாக அருகில் இருந்த சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் உமாபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் உமாபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உழவர்சந்தை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தின் ஒரு பகுதியில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. நேற்று காலை வழக்கம்போல் உழவர்சந்தை செயல்பட்டு கொண்டிருந்தது. ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அந்த வேளையில் உழவர் சந்தைக்கு அருகே உள்ள தனியார் கட்டிடத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து உழவர் சந்தை கடைகளின் மீது விழுந்தது. 
இதில் உழவர்சந்தையில் காய்கறிகள் விற்றுக்கொண்டிருந்த 2 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நிவாரண தொகை

இதுபற்றி தகவல் அறிந்ததும் கலெக்டர் அமர்குஷ்வாஹா, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், தேவராஜ், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, தாசில்தார் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் உழவர்சந்தைக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசின் நிவாரண தொகையை கலெக்டர் வழங்கினார். 

அப்போது மருத்துவ அலுவலர் அம்பிகா, டாக்டர்கள் சிவசுப்பிரமணியன், செந்தில், அ.தி.மு.க. நகர செயலாளர் சதாசிவம், பொருளாளர் தன்ராஜ், வர்த்தக அணி ஆர்.வி.குமார், தி.மு.க. நகர பொறுப்பாளர் சாரதி குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

ஏரி நிரம்பி வழிந்தது

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொத்த கோட்டை ஊராட்சியில் உள்ள எர்ராகுட்டை ஏரி கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக 15 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது.

 நேற்று காலை கொத்தகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மேனகா ஜெகதீசன் தலைமையில், வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கோவி. சம்பத்குமார் உள்பட அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கு சிறப்பு பூஜை நடத்தி கற்பூரம் ஏற்றியும், மலர் தூவியும் தண்ணீரை வரவேற்றனர். பின்னர் கிராம மக்கள் 2 கிடா வெட்டி அப்பகுதி மக்களுக்கு விருந்து வைத்தனர். 

ஆம்பூரில் பயிர்கள் சேதம்

ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தொடர்ந்து 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆம்பூரை சுற்றி உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கராஜ், சசிகுமார் ஆகியோர் நெல் பயிரிட்டு இருந்தனர். நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் வெளியேற ஆரம்பித்தது. 

இதன் காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் அடைந்தது. சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த இருந்த பயிர்களும் அதனை ஒட்டியுள்ள வாழை மரங்களும் சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்