வாலிபரை கொன்ற 2 பேர் கைது

ராமநாதபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கொன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2021-11-12 23:38 IST
பனைக்குளம்,

ராமநாதபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கொன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்காதல்

 மண்டபம் ஊராட்சி ஒன்றியம், புதுவலசை அருகில் உள்ள தாவுக்காடு பகுதியை சேர்ந்தவர் கோகுலராஜ் (வயது 24). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது. கோகுலராஜின் பெரியப்பா சுப்பிரமணி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (24). இவர் அப்பகுதியில் பனை மட்டையில் இருந்து தும்பு உற்பத்தி செய்யும் தொழில் செய்து வந்தார். இவரிடம் கோகுலராஜ் வேலை செய்து வந்தார். 
இந்த நிலையில கோபாலகிருஷ்ணனுக்கும் கோகுலராஜின் மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் கள்ளக்காதலர்கள் இருவரும் ஊரைவிட்டு வெளியேறி வெளியூர் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கோகுலராஜ், அவரது குடும்பத்தினர் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

வாலிபர் வெட்டிக்கொலை

 இருவரையும் கண்டித்த குடும்பத்தினர் மீண்டும் கோகுலராஜுடன் முத்துலட்சுமியை சேர்த்து வைத்தனர். இதனால் கோபாலகிருஷ்ணன் மீது கோகுலராஜ் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்ற முன்தினம் கோபாலகிருஷ்ணன் தாவுகாடு சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கோகுலராஜ் மற்றும் அவரது உறவினரான விஜயகுமார் உள்பட சிலர் வழிமறித்து கோபால கிருஷ்ணனை அரிவாளால் வெட்டினார்கள். இதைப்பார்த்த அவரது சகோதரி இசக்கியம்மாள் (32) தடுக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த கும்பல் வெட்டியது.பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
இதில் கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த தேவிபட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேர் கைது

 மேலும் அரிவாள் வெட்டில் காயமடைந்த இசக்கியம்மாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை தொடர்பாக கோகுலராஜ் மற்றும் விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்