சுங்க கட்டணம் செலுத்தாததால் அரசு விரைவு பஸ்களுக்கு அனுமதி மறுப்பு

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்தாததால் அரசு விரைவு பஸ்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-11-12 17:07 GMT
விக்கிரவாண்டி, 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடிக்கு நேற்று காலை 8.20 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு 5 அரசு விரைவு பஸ்கள் வந்தன. ஆனால் அந்த அரசு விரைவு பஸ்கள் செல்வதற்காக சுங்க கட்டணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. 
இதனால் அந்த 5 அரசு விரைவு பஸ்களையும் சுங்கச்சாவடியை கடந்து செல்ல சுங்கச்சாவடி ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. ஆத்திரமடைந்த 5  டிரைவர்களும், சுங்கச்சாவடியின் 5 வழித்தடங்களில் அரசு விரைவு பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக டிரைவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

போக்குவரத்து பாதிப்பு 

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது அரசு விரைவு பஸ் டிரைவர்கள், மாதந்தோறும் பஸ்களுக்கு சுங்க கட்டணம் செலுத்தி வருகிறோம். இந்த மாதத்திற்கு செலுத்த வேண்டிய சுங்க கட்டணத்தை எங்களது கோட்ட மேலாளர் ஈ.சி. முறையில் செலுத்தியுள்ளதாகவும், சுங்க கட்டணம் செலுத்தியதற்காக தங்களது செல்போனுக்கு வந்திருந்த குறுஞ்செய்தியை காண்பித்தனர். அதற்கு சுங்கச்சாவடி ஊழியர்கள், சுங்கச்சாவடி வங்கி கணக்கில் சுங்க கட்டணம் வரவில்லை. எனவே அரசு விரைவு பஸ்களை அனுமதிக்க முடியாது என்றனர். 

பரபரப்பு 

இதையடுத்து போலீசார், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் தற்போது நின்று கொண்டிருக்கும் 5 அரசு விரைவு பஸ்களின் பதிவு எண், டிரைவர்களின் செல்போன் எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். சென்னைக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது, வங்கி கணக்கில் அந்த கட்டணம் வரவில்லை என்றால் பஸ்களின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றனர்.  அதன்படி சுங்கச்சாவடி ஊழியர்கள், பதிவு எண் மற்றும் டிரைவர்களின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு 5 அரசு விரைவு பஸ்களையும் சுங்கச்சாவடி வழியாக செல்ல அனுமதித்தனர். அதன்பிறகே போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் அந்த சுங்கச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்