பாகூரில் மாவட்ட துணை கலெக்டர் சிறை பிடிப்பு

பாகூர் பகுதியில் மழை சேதங்களை பார்வையிட வந்த மாவட்ட துணை கலெக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-12 17:02 GMT
பாகூர், நவ.
பாகூர் பகுதியில் மழை சேதங்களை பார்வையிட வந்த மாவட்ட துணை கலெக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குடியிருப்புகளில் வெள்ளம்
பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் பாகூர், கிருமாம்பாக்கம், பரிக்கல்பட்டு, கன்னியக்கோவில் உள்ளிட்ட கிராமங்களில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், புதுச்சேரி தெற்கு மாவட்ட துணை கலெக்டர் ரிஷிதா குப்தா, நேற்று கிருமாம்பாக்கம், பரிக்கல்பட்டு, பாகூர் பேட் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளை பார்வையிட்டார். 
அங்கு தேங்கி இருந்த மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பின் கிருமாம்பாக்கம் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள மத்திய சமையல் கூடத்திற்கு சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார். 
அங்கு எத்தனை பேருக்கு உணவு சமைக்கப்படுகிறது, எந்தெந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்ற விவரங்களை கேட்டறிந்தார். அப்போது சமையல் ஊழியர்கள் தங்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சிறை பிடிப்பு
தொடர்ந்து பரிக்கல்பட்டு, பாகூர் பேட் பகுதியில் பார்வையிட சென்றார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் எந்த அதிகாரியும் வரவில்லை.  தொகுதி எம்.எல்.ஏ. மட்டுமே வந்து நடவடிக்கை எடுத்தார். வருவாய் துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை என புகார் தெரிவித்தனர்.
இப்போது, மழை நின்று தண்ணீர் வடிந்த பிறகு பார்க்க வந்துள்ளீர்கள். அதுவும் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவிக்காமல் வந்திருப்பதாக கூறி வாகனத்துடன் அவரை சிறைபிடித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த பாகூர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து துணை கலெக்டர் வாகனத்தை அனுப்பி வைத்தனர்.
மற்றொரு இடத்திலும்...
பின்னர் குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு பகுதியை பார்வையிட்டு, இருளஞ்சந்தை கிராமத்தில் இருளர் குடியிருப்பு பகுதியை பார்வையிட  சென்றார். அங்கும் அப்பகுதி மக்கள் துணை கலெக்டரை சிறைபிடித்தனர்.
தகவலறிந்த செந்தில்குமார் எம்.எல்.ஏ. அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் துணை கலெக்டர் கார் விடுவிக்கப்பட்டது. 
இதையடுத்து இருளர் குடியிருப்பு பகுதியை செந்தில்குமார் எம்.எல்.ஏ. வுடன் துணை கலெக்டர் ரிஷிதா குப்தா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
மழையால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட வந்த துணை கலெக்டரை காருடன் பொதுமக்கள் சிறைபிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்