முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதால், அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-12 16:31 GMT
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதால், அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 
முல்லைப்பெரியாறு அணை
தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. அணையின் உயரம் 152 அடி ஆகும். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
இந்தநிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. அதன்படி, கடந்த மாதம் 23-ந்தேதி அணையின் நீர்மட்டம் 136 அடியை கடந்தது. அப்போது அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டாம் என கேரள அரசு வலியுறுத்தியது. 
தண்ணீர் திறப்பு
இதற்கிடையே அணையின் பாதுகாப்பு தொடர்பான ரிட் மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் 28-ந்தேதி நடந்தது. அப்போது, நவம்பர் 11-ந்தேதி வரை (அதாவது நேற்று முன்தினம் வரை) அணையின் நீர்மட்டத்தை 139.50 அடியாக பராமரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 
ஆனால் அணையின் நீர்மட்டத்தை 139 அடியை கூட எட்டவிடாமல் தொடர்ந்து கேரள மந்திரிகள், அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டனர். அப்போது கேரளாவுக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அணையில் இருந்து தண்ணீர் திறப்பை குறைத்து, நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 
நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை
இந்தநிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று முதல் குறைக்கப்பட்டது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,897 கனஅடியாக இருந்தது. மேலும் தமிழகத்துக்கு வினாடிக்கு 1,867 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு நேற்று காலை முதல் வினாடிக்கு 933 கனஅடியாக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அணையின் நீர்மட்டம் 138.95 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்