ஸ்கூட்டரை வழிமறித்து பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்துச்சென்ற 2 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்
ஸ்கூட்டரை வழிமறித்து பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்துச்சென்ற 2 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்
உடுமலை,
உடுமலை அருகே ஸ்கூட்டரை வழிமறித்து பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்துச்சென்ற 2 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் நகை பறிப்பு
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உடுமலையை அடுத்துள்ள கண்ணமநாயக்கனூரைச்சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன். சரக்கு வாகன டிரைவராக உள்ளார். இவரது மனைவி சத்யா (வயது32). இவர் நேற்று முன்தினம் மாலை உடுமலையில் இருந்து தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மலையாண்டிகவுண்டனூரை அடுத்து கண்ணமநாயக்கனூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவருக்குப்பின்னால் 2 மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். திடீரென்று சத்யாவின் ஸ்கூட்டரை முந்தி சென்று வழிமறித்து நிறுத்தினர். அதனால் நிலை தடுமாறிய சத்யா கீழே விழுந்தார். உடனே மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து வந்த மர்ம ஆசாமி கீழே இறங்கி வந்து, சத்யா அணிந்திருந்த தாலிச்சங்கிலியை பறித்தார்.
அப்போது சத்யா தாலிச்சங்கிலியை கெட்டியாக பிடித்துக்கொண்டார். அந்த மர்ம ஆசாமி இழுத்ததில் தாலிச்சங்கிலி அறுந்தது. இதில் சத்யாவின் கையில் ஒரு பவுன் அளவிற்கு மட்டுமே சங்கிலி இருந்தது. மீதி அறுந்த 5 பவுன் சங்கிலியுடன் அந்த மர்ம ஆசாமி மோட்டார் சைக்கிளில் ஏறியதும் 2 பேரும் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.
போலீசில் புகார்
இதுகுறித்து சத்யா உடுமலை போலீசில் புகார் செய்தார். இதையொட்டி உடுமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.வி.சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, தாலிச்சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.