எலையமுத்தூர்அமராவதி சாலையில் மண் அரிப்பு பகுதியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
எலையமுத்தூர்அமராவதி சாலையில் மண் அரிப்பு பகுதியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தளி,
எலையமுத்தூர்-அமராவதி சாலையில் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமராவதி சாலை
உடுமலையில் இருந்து எலையமுத்தூர், கல்லாபுரம் வழியாக அமராவதிக்கு செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த சாலையை சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கிராமப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழில் என்பதால் இந்த சாலை விவசாயிகளுக்கு பிரதானமாக உள்ளது. விளைபொருட்களை விற்பனைக்கும் வயல்வெளிகளுக்கு இடுபொருட்களை கொண்டு செல்வதற்கும் உதவிகரமாக உள்ளது.
பருவமழை தீவிரம்
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை ஒட்டி அமராவதி பகுதியில் பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக நீர்வழித்தடங்கள் வயல்வெளிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் தண்ணீர் தாழ்வான பகுதியில் வடிந்து சென்றவாறு இருந்தது.
அந்த வகையில் கல்லாபுரத்தை அடுத்த அமராவதி ஆற்றின் அருகே எலையமுத்தூர்- அமராவதி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் சாலையின் ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது.
மண் எரிப்பு
அதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்கின்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று விலகிச்செல்ல முற்படும் போது விபத்துகள் ஏற்படும் சூழல் நிலவுவதுடன் சாலையும் சேதமடையும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சாலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயும் சேதமடையும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இதனால் சுற்றுப்புற கிராமங்களுக்கு வழங்கப்படுகின்ற குடிநீர் வினியோகம் தடைபடும் வாய்ப்புகள் நிலவுகிறது. எனவே அமராவதி-எலையமுத்தூர் சாலையில் அமராவதி ஆற்றுக்கு அருகே மண்அரிப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.