தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அடங்கல் வழங்கும் பணியை கண்காணிக்க தாலுகா வாரியாக மேற்பார்வை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அடங்கல் வழங்கும் பணியை கண்காணிக்க தாலுகா வாரியாக மேற்பார்வை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்

Update: 2021-11-12 15:51 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அடங்கல் வழங்கும் பணியை கண்காணிக்க தாலுகா வாரியாக மேற்பார்வை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மேற்பார்வை அலுவலர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் பயிராய்வு மற்றும் பயிர் காப்பீடு செய்ய அடங்கல் வழங்கல், பி.எம். கிஸான் மற்றும் இ-அடங்கல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மேற்பார்வை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். விளாத்திகுளம் தாலுகாவுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு தூத்துக்குடி உதவி கலெக்டர், திருச்செந்தூர் தாலுகாவுக்கு திருச்செந்தூர் உதவி கலெக்டர், கோவில்பட்டி தாலுகாவுக்கு கோவில்பட்டி உதவி கலெக்டர், தூத்துக்குடி தாலுகாவுக்கு மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), சாத்தான்குளம் தாலுகாவுக்கு இஸ்ரோ நிலம் எடுப்பு துணை ஆட்சியர், ஏரல் தாலுகாவுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், எட்டயபுரம் தாலுகாவுக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், கயத்தாறு தாலுகாவுக்கு உதவி ஆணையர் (கலால்) ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சிறப்பு முகாம்
இந்த மேற்பார்வை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களின் பயிராய்வு குறித்த அறிக்கையை இந்த அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். உளுந்து மற்றும் பாசி பயிருக்கான பயிர் காப்பீடு நாளைமறுநாளுடன்(திங்கட்கிழமை) முடிவடைய இருப்பதால் பட்டாதாரர்களுக்கு உளுந்து, பாசி பயிர்களுக்கு அடங்கல் நகல் வழங்கிட இன்று (சனிக்கிழமை) அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் அடங்கல் வழங்கும் சிறப்பு முகாமை நடத்த வேண்டும். 
இந்த முகாமை மேற்பார்வை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்படும் அடங்கல் பதிவேட்டில் அனைத்து புலங்களையும் பயிராய்வு மேற்கொண்டு உரிய பதிவுகள் மேற்கொண்டு பட்டாதாரர்களுக்கு அடங்கல் நகலை காலதாமதமின்றி வழங்கிடும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
பி.எம் கிஸான் பட்டியலை மறு ஆய்வு செய்து திருத்திய பட்டியல் தயார் செய்ய அறிவுறுத்த வேண்டும். இ-அடங்கல் இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்