2வது முறையாக சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியின் உபரி நீர் 2வது முறையாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியின் உபரி நீர் 2வது முறையாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள வேங்கிக்கால் ஏரி கடந்த மாதம் (அக்டோபர்) நிரம்பி உபரி நீர் வெளியேற தொடங்கியது.
இதற்கிடையில் கடந்த 21-ந் தேதி நள்ளிரவு பெய்த பலத்த மழையின் காரணமாக மறுநாள் அதிகாலையில் இருந்து வேங்கிக்கால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து உபரி நீர் போளூர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. தொடர்ந்து நேற்று திருவண்ணாமலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் மீண்டும் 2-வது முறையாக வேங்கிக்கால் ஏரியின் உபரி நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. ஏரிக்கு எதிரில் உள்ள குறிஞ்சி நகரில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.
சாலைகளில் தேங்கியது
இதையடுத்து வேங்கிக்கால் ஊராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் வேங்கிக்கால் ஏரியில் இருந்து அவலூர்பேட்டை சாலையில் உள்ள சேரியந்தல் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை பொக்லைன் எந்திரம் மூலம் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சேரியந்தல் ஏரியில் இருந்தும் உபரி நீர் வெளியேறுவதால் அவலூர்போட்டை சாலையில் உள்ள அய்யப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்தது. இதனால் அவலூர்பேட்டை சாலையிலும் மழை நீர் தேங்கியது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போளூர் சாலை மற்றும் அவலூர்பேட்டை சாலையில் சென்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கால்வாய்களை அகலப்படுத்தி சாலையில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகளை தீவிரப்படுத்தி அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி கலெக்டர் வெற்றிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ், வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்செல்வன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.