கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
ஆரணி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். எம்எல்ஏ அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
ஆரணி
ஆரணி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ., அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
அடிப்படை வசதிகள்
ஆரணியை அடுத்த வேலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணகிநகர் பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் சாலைகள் முழுவதும் மண் பாதையாக காட்சியளிக்கிறது.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரியும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரியும் அந்தக் கிராம மக்கள் ஆரணி-வந்தவாசி நெடுஞ்சாலையில் கண்ணகிநகர் அருகில் திடீரென சாலையில அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அரணி தாசில்தார் க.பெருமாள், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கு.இந்திராணி மற்றும் ஒன்றிய பொறியாளர், அலுவலர்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., அதிகாரிகள், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்தப் பகுதிக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் சாலை வசதி, கால்வாய் வசதி அமைக்கவும், குடிநீர் வசதிக்காக புதிதாக ஆழ்துளை அமைக்கவும், தொகுதி மேம்பாட்டு நிதி, ஒன்றிய பொது நிதியிலும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகளும், எம்.எல்.ஏ.வும் உறுதியளித்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எம்.எல்.ஏ. ஆய்வு
முன்னதாக ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செய்யாறு தாலுகா முனுகப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மேல்புத்தூர் ஏரி கால்வாய் உடைந்து, அந்த வழியாக போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிைய முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.