பேரம்பாக்கம் கூவம் ஆற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்
தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரம்பாக்கம் கூவம் ஆற்றில் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
பலத்த மழை
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை போன்ற ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள ஆறு, குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது.
இந்த நிலையில் பேரம்பாக்கத்தில் உள்ள கூவம் ஆற்றில் கடந்த 4 நாட்களாக ஆற்றில் தண்ணீர் செல்கிறது.
போக்குவரத்து துண்டிப்பு
நேற்று அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் பேரம்பாக்கத்தில் உள்ள கூவம் ஆற்றில் அமைந்துள்ள தரைப்பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சி சார்பில் பொதுமக்கள் தரைப்பாலத்தை பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை துண்டித்தனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பேரம்பாக்கம் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து திரளான பொதுமக்கள் கண்டு களித்து செல்கின்றனர். கனமழை காரணமாக கூவம் ஆற்றின் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து பேரம்பாக்கத்தில் இருந்து இருளஞ்சேரி, நரசிங்கபுரம், குமாரச்சேரி, கூவம் செல்லும் பொதுமக்கள் 2 கிலோமீட்டர் சுற்றி பேரம்பாக்கம் புதிய பாலம் வழியாக சென்று வருகின்றனர்.