வேப்பம்பட்டு ரெயில் நிலைய தண்டவாளத்தில் வேருடன் சாய்ந்த மரம்
தொடர் கனமழை காரணமாக திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே உள்ள இலவ மரம் ஒன்று நேற்று காலை 8 மணி அளவில் வேருடன் சாய்ந்து தண்டவாளத்தில் விழுந்தது. மரக்கிளையால் ரெயில்வே மின்கம்பிகள் அறுந்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் திருவள்ளூரில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் ரெயில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவள்ளூர் ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் தண்டவாளத்தில் விழுந்த மரத்தை முழுவதுமாக வெட்டி அகற்றும் பணியையும், அறுந்து விழுந்த ரெயில்வே மின்கம்பிகளை மீண்டும் இணைக்கும் பணியிலும் துரிதமாக செயல்பட்டனர்.
அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்து ரெயில்வே ஊழியர்கள் மின் கம்பிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரெயில்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.
ரெயில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் 4 மணி நேரத்துக்கும் மேலாக ரெயில் பயணிகள் அவதிப்பட்டனர். மதியம் 12 மணி அளவில் மரம் முழுவதுமாக அகற்றப்பட்டு அறுந்து விழுந்த மின் கம்பியை சீர் செய்த பின்னர் திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு ரெயில் போக்குவரத்து சீரானது.