தாம்பரத்தில் 23 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது; குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்குள் தண்ணீர் புகுந்தது

தாம்பரத்தில் 23 செ.மீ. மழை கொட்டித்தீர்த்ததால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழந்தது. குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்தது.

Update: 2021-11-12 06:21 GMT
தாம்பரம்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தாம்பரத்தில் 23 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி உள்ளது. மழைநீர் தேங்கி உள்ள பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

முடிச்சூர் அமுதம் நகர், தாம்பரம் கிருஷ்ணா நகர், சக்தி நகர், பாரதி நகர், கண்ணன் அவென்யூ உள்ளிட்ட பகுதிகளிலும், செம்பாக்கம், திருமலை நகர் பகுதியிலும் மழைநீர் சாலை முழுவதும் ஆறாக ஓடியதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். தாம்பரம் ரெயில்வே சுரங்கப்பாதை மழைநீர் வெள்ளத்தில் மூழ்கியது.

குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். உடனடியாக நோயாளிகள் அனைவரும் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மற்றொரு புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டனர்.

ராஜகீழ்பாக்கம் பகுதியிலுள்ள ஏரிக்கரையை ஆக்கிரமிப்பாளர்கள் உடைத்து விட்டதால் ஏரியிலிருந்து வெளியேறிய தண்ணீர் வள்ளல் யூசுப் நகர், சத்திய சாய் நகர், டெல்லஸ் அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்துள்ளது.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம் பெரிய ஏரி, இரும்புலியூர் ஏரிகள் நிரம்பி, அவற்றில் இருந்து வெளியேறிய, உபரி நீர் பீர்க்கன்காரணை பகுதிக்குட்பட்ட காயத்ரி நகர், குறிஞ்சி நகர் ரோஜாதெரு, கனகாம்பரம்தெரு, பாரிஜாதம் தெரு மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் வீடுகளை சுற்றிலும் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது.

திருவொற்றியூர் மேற்கு பகுதியில் அண்ணாமலை நகர், கலைஞர் நகர் உள்பட 30-க்கும் மேற்பட்ட நகர்களில் சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்லும் வழியான மாணிக்கம் நகர் ெரயில்வே சுரங்கப்பாதை மழை நீரில் மூழ்கியது. விம்கோ நகர் பகுதியிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே திருவொற்றியூர் மேற்கு பகுதி துண்டிக்கப்பட்டு தீவு போல் காட்சி அளிக்கிறது.

வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் வீட்டில் உள்ள பொருட்களை உயரமான இடத்தில் வைத்து விட்டு நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த பகுதிக்கு கனரக வாகனங்கள் மூலம் மட்டுமே தற்போது செல்லக்கூடிய ஒரு சூழல் உள்ளது. இதனால் டிராக்டர் மூலம் வீடுகளைவிட்டு பொதுமக்கள் வெளியேறினர்.

கிண்டி வேளச்சேரி மெயின் சாலையில் சாலையோர இருந்த மரம் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கிண்டி போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர்.

இதேபோல் கிண்டி, மடுவின்கரை, வேளச்சேரி பகுதியில் 10 மரங்களும், நங்கநல்லூர் பகுதியில் 3 மரங்களும், ஆலந்தூரில் 5 மரங்களும், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் 6 மரங்களும் விழுந்தன. இந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றினர்.

தொடர் மழையால் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பருத்திப்பட்டு, பாலேரிப்பட்டு, விளிஞ்சியம்பாக்கம், சேக்காடு பெரிய ஏரி, கோவிந்தன் தாங்கல், கோவில்பதாகை ஏரி உள்பட 20-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் ஏரிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், திருநின்றவூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆவடி போலீஸ் நிலையத்துக்குள் முழங்கால் அளவுக்கு மழை நீர் புகுந்ததால் போலீஸ்காரர்கள் உள்ளே அமர்ந்து பணி செய்ய முடியாமல் வெளியேறி உள்ளனர்.

ஆலந்தூர் பிச்சன் தெருவில் உள்ள 500 வீடுகளையும், நங்கநல்லூர் பகுதியில் 2 ஆயிரம் வீடுகளையும், உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதியில் 3 ஆயிரம் வீடுகளை என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். வேளச்சேரியில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியது.

பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி நிரம்பியதால் துரைப்பாக்கம்- பல்லாவரம் ரேடியல் சாலையில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடியதால் பள்ளிக்கரணை பகுதியில் சாலை அடைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்