சென்னையில் வெள்ள நிவாரண பணிக்கு செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு
சென்னையில் வெள்ள நிவாரண பணிக்கு செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.;
ஈரோடு
சென்னையில் வெள்ள நிவாரண பணிக்கு செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
வெள்ள நிவாரண பணி
ஈரோடு மாவட்ட தூய்மை பணியாளர் கூட்டமைப்பு சார்பில், தூய்மை பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு ஒன்றை நேற்று கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
சென்னையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட வெள்ள நிவாரண பணிகளுக்கு ஈரோடு உள்பட பிற மாவட்டத்தில் இருந்து தூய்மை பணியாளர்களை அழைத்து சென்றனர். அழைத்து சென்ற விதமும், நடத்திய விதமும் கசப்பான அனுபவத்தை தந்தது. அங்கு பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு தங்குவதற்கு இடமும், உணவு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவிவ்லை.
மேலும், தூய்மை பணி மேற்கொள்ள முறையான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட வில்லை. எனவே, நடப்பாண்டில் சென்னை மாநகராட்சியில் வெள்ள பாதிப்பு பணிகளை சீர் செய்ய ஈரோடு மாவட்டத்தில் இருந்து செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு தனி பஸ் வசதி, தரமான உணவு, தங்குமிடம், பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்.
ஊக்கத்தொகை
தூய்மை பணியாளர்கள் தங்கும் இடத்தில் அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும். வெள்ள நிவாரண பணிகளுக்கு செல்வதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க அனைவருக்கும் காப்பீடு செய்ய வேண்டும்.
தொடர்ந்து தங்கி பணிபுரியும் பட்சத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். சென்னை மாநகராட்சியின் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதால் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.