பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி குடும்பத்தினரை போலீசார் மிரட்டுவதாக வழக்கு
பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி குடும்பத்தினரை போலீசார் மிரட்டுவதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை,
தேனி மாவட்டத்தை சேர்ந்த பவுன்கொடி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- எனது மகள் வசந்தி, நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவர் குற்றச்செயலில் ஈடுபட்டதாக கைதானார். தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந்தேதி மதுரை குற்றத்தடுப்புப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் மற்றும் சில போலீஸ்காரர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அவர்கள், எனது குடும்பத்தினரை பொது இடத்தில் தரக்குறைவான வார்த்தைகளால் பேசினர். வசந்தி எங்கே இருக்கிறார்? என்று கேட்டு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் மிரட்டினர். ஆனால் எனது மூத்த மகள் வசந்திக்கும். எங்கள் குடும்பத்தினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் வழக்கு விசாரணைக்காக எனது குடும்பத்தினரை தேனி மற்றும் மதுரைக்கு போலீசார் தொடர்ந்து அழைத்து தொந்தரவு செய்கின்றனர்.
இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பதில் இல்லை. எனவே விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது என்றும், எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீசார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் புகார் குறித்து உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இனி வரும் காலங்களில் வசந்தி சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை என்ற பெயரில் அவரது குடும்பத்தினருக்கு எந்த அழைப்பும் இருக்காது என்று உறுதியளித்தார்.
இதையடுத்து மனுதாரர் தரப்பில், போலீசார் விசாரணைக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு தருகிறோம் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.