ஓய்வூதியர்களின் மனுக்கள் மீது தனிகவனம் செலுத்தி நடவடிக்கை
ஓய்வூதியர்களின் மனுக்கள் மீது தனிகவனம் செலுத்தி நடவடிக்கை
சேலம், நவ.12-
ஓய்வூதியர்களின் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் கூறினார்.
குறைதீர்க்கும் கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஓய்வூதியர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது. ஓய்வூதிய இயக்கக இணை இயக்குனர் எஸ்.கமலநாதன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசும் போது கூறியதாவது:-
ஓய்வூதியதாரர்களின் குறைகளை கேட்டறியும் வகையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து தற்பொழுது மாவட்ட அளவில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடங்கப்பட்டு நடைபெறுகிறது.
நடவடிக்கை
இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஓய்வூதியர்களிடம் இருந்து 34 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவ்வாறு ஓய்வூதியதாரர்களிடம் இருந்து பெற்ற மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் கருவூலம் மற்றும் கணக்கு துறையின் வேலூர் மண்டல இணை இயக்குன சாந்திமணி, ஓய்வூதிய இயக்கக துணை இயக்குனர் வேலாயுதம், மாவட்ட கருவூல அலுவலர் யோகேஸ்வரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அமுதவள்ளி, கூடுதல் கருவூல அலுவலர் மேனகா மற்றும் ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியதாரர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.