சேலம், நவ.12-
சேலம் மாவட்டத்தில் தொடர் மழையினால் 60 ஏரிகள் நிரம்பி உள்ளன.
60 ஏரிகள் நிரம்பின
வடகிழக்கு பருவமழையையொட்டி சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்து மழைநீர் விரைவில் வடியும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் மழையினால் குளங்கள், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தம் 430 ஏரிகள் உள்ளன. இதில் தற்போது வரை சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள மூக்கனேரி, புது ஏரி உள்பட 60 ஏரிகள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகின்றன. 42 ஏரிகள் 75 சதவீதம் வரை நிரம்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிரம்பிய ஏரிகளையொட்டி வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், மேடாக பகுதிக்கு செல்லுமாறும் தண்டோரா மூலம் அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி கொண்டு வருகின்றனர்.
சாரல் மழை
சேலத்தில் நேற்று முன்தினம் இரவு லேசாக சாரல் மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டதுடனே காணப்பட்டது. ஆனால் மழை பெய்ய வில்லை. பின்னர் மதியம் 1 மணி அளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டன.
காலையில் பல்வேறு தொழில்களுக்கு சென்றவர்கள் மாலையில் மழையினால் வீடு திரும்ப முடியாமல் அவதியுற்றனர். இதேபோல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களும் பணி முடிந்து வீட்டுக்கு செல்ல சிரமம் அடைந்தனர். தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் தேங்கி கிடக்கின்றன. மேலும் சாலைகளிலும் மழையினால் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பகல் மற்றும் இரவில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களை குளிர் வாட்டி வதைக்கிறது. வானிலை ஆய்வு மையத்தால் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாலும், சேலம் மாவட்டத்துக்கு 'ரெட் அலார்ட்" விடுக்கப்பட்டதாலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையத்தில் 19 மில்லி மீட்டர் மழை பதிவானது. மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- கரியகோவில்-12, தலைவாசல்-12, வீரகனூர்-10.4, ஆத்தூர்-9, கெங்கவல்லி-7, ஆனைமடுவு-7, ஏற்காடு-6.6, சங்ககிரி-3, காடையாம்பட்டி-3, மேட்டூர்-2.8, சேலம்-1.2 ஆகும்.