“ஆண்களைவிட பெண்களே திறமையானவர்கள்”-மகளிர் கோர்ட்டு நீதிபதி
ஆண்களைவிட பெண்களே திறமையானவர்கள் என மகளிர் கோர்ட்டு நீதிபதி கூறினார்.;
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்களைவிட பெண்களே திறமையானவர்கள் என மகளிர் கோர்ட்டு நீதிபதி கூறினார்.
விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரியில் விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் செந்தாமரை தலைமை தாங்கினார். விழாவில் உதவி அரசு வழக்கறிஞர் சுரேஷ் வரவேற்று பேசினார். விழாவில் விரைவு கோர்ட்டு நீதிபதி சந்திரகாச பூபதி, நன்னடத்தை அதிகாரி அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் மகளிர் கோர்ட்டு நீதிபதி சிவராஜேஷ் கலந்து கொண்டு பேசியதாவது:-
நீதி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் அனைத்து வழக்குகளுக்கும் தீர்வு கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இலவச சட்ட உதவிகள் மூலம் தங்களது கோரிக்கைகளுக்கு பரிகாரம் தேடிக் கொள்ளலாம். இதற்காகவே இந்த ஆணைக்குழு இயங்கி வருகிறது. மாணவிகள் படிக்கும்போது மிகவும் நன்றாக படித்து உயர்ந்த பதவியை அடைய வேண்டும்.
திறமையானவர்கள்
18 வயது முடிந்தவுடன் நீங்கள் மைனர் வயதை கடந்து விடுவீர்கள். இதனால் பெற்றோர்களை எதிர்த்து பேசக்கூடாது. பெற்றோர்கள் சொல்படி நடந்து கொள்ள வேண்டும். படிக்கும் வயதில் காதல் கொள்ளாதீர்கள். காதலில் விழுந்தால் உங்கள் வாழ்க்கை வீணாகி விடும். படித்து முடித்து நல்ல பதவியை அடைய பாடுபட வேண்டும். ஆண்களை விட பெண்கள் மிகவும் திறமையானவர்கள். உலக பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறளை இயற்ற திருவள்ளுவர் 1,330 குறளை உருவாக்கி அதன்மூலம் வாழ்க்கையின் தத்துவத்தை எடுத்து கூறியுள்ளார். ஆனால் 1,330 குறளில் உள்ள அர்த்தத்தை அவ்வையார் 4 வரிகள் கூறியுள்ளார்.
தற்போது உலகம் உங்கள் கைக்குள் சுருங்கி உள்ளது. செல்போன் மூலம் அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைக்கிறது.
இதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளும் உருவாகி வருகிறது. வாட்ஸ்-அப் பயன்படுத்தும் போது மிகவும் கண்ணியத்துடன் பயன்படுத்துங்கள். அதுவே உங்களுக்கு பிரச்சினையாகும் வரும்படி செயல்படாதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.