வேலூர் அருகே பஸ் நிறுத்தத்தில் இளம்பெண்ணுக்கு தாலிகட்ட முயன்ற வாலிபரால் பரபரப்பு

வேலூர் அருகே பஸ் நிறுத்தத்தில் இளம்பெண்ணுக்கு தாலிகட்ட முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-11-11 18:31 GMT
வேலூர்

வேலூர் அருகே பஸ் நிறுத்தத்தில் இளம்பெண்ணுக்கு தாலிகட்ட முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

தாலி கட்ட முயற்சி

வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் பகுதியில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தின் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை பொதுமக்கள் பலர் பஸ்களுக்காக காத்திருந்தனர். இதில் இளம்பெண் ஒருவரும் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு வாலிபர் வந்தார்.
 
பின்னர் இளம்பெண்ணும், வாலிபரும் பேசிக்கொண்டிருந்தனர். திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் ஆவேசமாக பேசிக்கொண்டனர். அப்போது அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்து அந்த பெண்ணின் கழுத்தில் கட்ட முயற்சி செய்தார். இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சுதாரித்துக் கொண்டு தாலி கட்டுவதை தடுத்து அங்கிருந்து ஓடினார்.

எனினும் அந்த வாலிபர் பெண்ணை விரட்டிச் சென்று தாலி கட்ட முயன்றார். அங்கிருந்த பொதுமக்கள் ஓடிச் சென்று வாலிபரை பிடிக்க முயன்றனர். அந்த பெண்ணும் தனது கைப்பையை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

போலீஸ் விசாரணை 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோவும் வாட்ஸ்அப்பில் பரவியது.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் கூறுகையில், அந்த பெண்ணும், அந்த வாலிபரும் உறவினர்கள். இருவரும் காதலித்துள்ளனர். தனியார் வங்கியில் வேலை பார்க்கும் அந்த பெண் வேலைக்கு சென்றபோது தன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என வாலிபர் வற்புறுத்தினார். ஆனால் பெற்றோர் அனுமதியில்லாமல் திருமணம் செய்யமாட்டேன் என அந்த பெண் கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபர் தாலி கட்ட முயன்றார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்