தானியங்கி கேமராக்கள் மூலம் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் உள்ளிட்ட வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது.

Update: 2021-11-11 18:22 GMT
தளி
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் உள்ளிட்ட வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது.
வனவிலங்குகள் கணக்கெடுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளது. 
இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகுபூனை, குரைக்கும்மான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. 
இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடை மற்றும் குளிர் காலத்தில் வனத்துறையினரால் நேரடியாக புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 
அதுதவிர நவம்பர் மாதத்தில் தானியங்கி கேமராக்கள் மூலம் 25 நாட்களுக்கு புலிகள் உள்ளிட்ட வன விலங்குகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
தானியங்கி கேமரா
அந்த வகையில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் 450 தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. அடர்ந்த வனப்பகுதியில் ஒவ்வொரு 2 கிலோ மீட்டர் சுற்றளவில் எதிரெதிராக இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. 
கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவடைந்த நாளில் இருந்து தொடர்ந்து 25 நாட்களுக்கு அதன் பதிவுகள் கண்காணிக்கப்படும். ஐந்து நாட்களுக்கு ஒருமுறை வனப்பணியாளர்கள் நேரடியாக சென்று கேமராக்கள் இயக்கத்தை ஆய்வு செய்வார்கள்.
அப்போது மெமரி கார்டுகள் மற்றும் பேட்டரி ஆகியவற்றின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். இறுதி நாளில் கேமராக்களில் பதிவான விலங்குகள் எண்ணிக்கை குறித்த அறிக்கையை தயார் செய்யப்பட்டு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 
இதற்கான பணியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக அலுவலர்கள் தனபாலன், சுரேஷ் ஆகியோர் தலைமையில் வனவர், வனக்காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்