சாலை தடுப்பில் கார் மோதி பெண் பலி
பெருமாநல்லூர் அருகே சாலை தடுப்பில் கார் மோதி பெண் பலியானார். பாட்டி இறந்த துக்கம் விசாரிக்க வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.
பெருமாநல்லூர்
பெருமாநல்லூர் அருகே சாலை தடுப்பில் கார் மோதி பெண் பலியானார். பாட்டி இறந்த துக்கம் விசாரிக்க வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.
கார் விபத்து
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சென்னை முகப்பேறு பகுதியை சேர்ந்தவர் சோடிதா (வயது 42). இவரது மகன் ராகுல் (23). இந்த நிலையில் கோவையில் வசித்து வந்த சோடிதாவின் பாட்டி கடந்த வாரம் உயிரிழந்தார். இந்த துக்கம் விசாரிக்க சோடிதா, அவருடைய மகன் ராகுல் ஆகியோர் ஒரு காரில் நேற்று முன் தினம் சென்னையில் இருந்து கோவைக்கு காரில் வந்தனர். காலை ராகுல் ஓட்டினார்.
இவர்களுடைய கார் நேற்று அதிகாலை கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஈட்டிவீரம்பாளையம் அருகே வந்ததது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
பெண் பலி
இந்த விபத்தில் காரின் முன் பகுதி சேதம் அடைந்தது. இதில் சோடிதாவும், அவருடைய மகன் ராகுலும் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் உள்ளவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு, அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில், சோடிதா உயிரிழந்தார். ராகுலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விபத்து தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பாட்டி இறந்த துக்கம் விசாரிக்க வந்த பேத்தி விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.