வடமாநில வாலிபர்கள் உள்பட 5 பேர் கைது

உச்சிப்புளி நபரிடம் செல்போன் ேகாபுரம் அமைக்க இடம் கேட்டு பணம் மோசடியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் உள்பட 5 பேர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2021-11-11 18:06 GMT
ராமநாதபுரம்,

உச்சிப்புளி நபரிடம் செல்போன் ேகாபுரம் அமைக்க இடம் கேட்டு பணம் மோசடியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் உள்பட 5 பேர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்."

செல்போன் கோபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராமு என்பவரின் மகன் ஆனந்தன் (வயது52). இவரது செல்போன் எண்ணிற்கு மிஸ்டுகால் வந்துள்ளது. அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது அதில் பேசிய நபர் தான் செல்போன் ேகாபுரம் அமைக்கும் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் தங்களிடம் இடம் இருந்தால் பிரபல செல்போன் நிறுவனத்திற்காக செல்போன் கோபுரம் அமைக்க இடம் தருமாறும் அதற்கு முன்பணமாக ரூ.30 லட்சமும், மாதந்தோறும் ரூ.35 ஆயிரம் வாடகையும் தருவதாக தெரிவித்துள்ளார். 
பயனில்லாமல் கிடக்கும் நிலத்திற்கு மாதந்தோறும் வாடகை கிடைத்தால் நல்லது என்று நினைத்து ஆசை கொண்ட ஆனந்தன் அவர்கள் கேட்டபடி நிலத்திற்கான பட்டா பத்திரம் ஆகியவற்றின் நகலை அனுப்பி உள்ளார். அந்த விபரங்களை பெற்றுக்கொண்ட நபர் அனைத்தும் சரியாக உள்ளதால் ரூ.12 ஆயிரத்து 500 முன்பணமாக செலுத்துமாறு கூறியதால் அந்த தொகையை ஆனந்தன் செலுத்தி உள்ளார். இதன்பின்னர் வைப்புத்தொகையாக ரூ.68 ஆயிரத்து 715 செலுத்துமாறு கூறியதால் போட்ட பணத்தினை எடுத்து கொள்ளலாம் என்று எண்ணி அதனையும் செலுத்தி உள்ளார்.

புகார்

 இதனை தொடர்ந்து செல்போன் ேகாபுரம் அமைக்க இடம் கேட்டு மோசடி குறித்து தகவல் வெளியானதால் சுதாரித்து கொண்ட ஆனந்தன் தான் செலுத்திய பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஒப்பந்த ரத்து படிவம் பூர்த்தி செய்து அனுப்புமாறு கூறி உள்ளனர். அந்த படிவத்தை பூர்த்தி செய்து வழங்கிய பின்னர் பணத்தை கேட்டபோது தராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆனந்தன் ரூ.81 ஆயிரத்து 215-ஐ மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மூலம் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில் மோசடி கும்பல் ஒன்று தமிழகம் முழுவதும், இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

5 ேபர் கைது

இந்த கும்பலை தமிழக காவல்துறையே வலைவீசி தேடிவந்தது. இந்நிலையில் இந்த மோசடியில் தமிழகத்தை கலக்கிய 13 பேர் கொண்ட கும்பல் சேலம் மாவட்ட போலீஸ் தனிப்படையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 150 சிம்கார்டுகள், 12 செல்போன்கள், 2 மடிக்கணினிகள், ரொக்கம் ரூ.48ஆயிரத்து 500, 3 காசோலை புத்தகங்கள், 20 ஏ.டி.எம். கார்டுகள் முதலியவற்றை கைப்பற்றினர். இவர்களில் சிலர் ராமநாதபுரம் உச்சிப்புளி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சைபர்கிரைம் போலீசார் சேலம் விரைந்து சென்றனர். அங்கு மோசடி சம்பவத்தில் தொடர்புடைய திருப்பூர் கணக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் மல்லையா (வயது 38), டெல்லி மலைச்சாமி மகன் சிவா (30), பாஸ்கர் மகன் சூர்யா (25), திருப்பூர் சவுடையா மகன் சந்திரசேகர் (36), திண்டுக்கல் சின்னாளப்பட்டி ஆண்டவர் மகன் மோகன்பிரபு (23) ஆகிய 5 பேரை கைது செய்து ராமநாதபுரம் அழைத்து வந்தனர். 
இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட ஆனந்தனிடம் மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து 5 பேரையும் ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய சைபர்கிரைம் பிரிவு போலீசார் 5 பேரையும் மீண்டும் சேலம் சிறையில் அடைத்தனர். 

விழிப்புடன் இருக்க வேண்டும்

இதுகுறித்து சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன் கூறும் போது,
ஐ.டி. நிறுவனங்கள், கால்சென்டர்களில் வேலைபார்த்து வந்த இளைஞர்கள் வேலைஇழந்த நிலையில் தாங்கள் வாங்கிய கடன் தொகையை கட்டுவதற்காக இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வருவது விசாரணையில் தெரியவந்தது. நாள்தோறும் பல்வேறு நூதன முறையில் மோசடி செய்துவருவதால் பொதுமக்கள் தங்களின் வங்கி கணக்கு விபரங்களை எக்காரணம்கொண்டும் எந்தமுறையில் யார் கேட்டாலும் பகிரக்கூடாது. நாம் விழிப்புடன் இருந்தாலே போதும் இதுபோன்ற மோசடிகள் நடைபெறாது என்றார்.

மேலும் செய்திகள்