கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை
கோட்டூர் அருகே பணத்துக்காக கழுத்தை நெரித்து மூதாட்டியை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டூர்:
கோட்டூர் அருகே பணத்துக்காக கழுத்தை நெரித்து மூதாட்டியை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூதாட்டி பிணம்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கெழுவத்தூர் மூளைக்கால் தெருவை சேர்ந்தவர் கேசவமூர்த்தி. இவருடைய மனைவி நாகம்மாள் (வயது 60). கேசவமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் நாகம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று நாகம்மாள் வீட்டின் கட்டிலில் இறந்து கிடந்தார். இதுகுறித்து நாகம்மாளின் அண்ணன் மகன் சிவசாகர்(28), நாகம்மாளின் சாவில் மர்மம் இருப்பதாக பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
கழுத்தை ெநரித்து கொலை
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த நாகம்மாளின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மாவட்ட ஆஸ்பத்திரிக்கு பிேரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
பிரேத பரிசோதனையில் மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
பணத்துக்காக நடந்த கொலை
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
நாகம்மாள் 2 ஏக்கர் நிலத்தை சாகுபடி செய்து வந்தார். இதனால் அவரிடம் பணம் இருந்துள்ளது. தென்கோவணூரை சேர்ந்த நாகம்மாளின் அக்காள் மகன் ராஜ்குமார்(39) இதனை கண்காணித்து வந்துள்ளார். மேலும் நாகம்மாளிடம் அவர், அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினமும் பணம் கொடுக்குமாறு ராஜ்குமார் கேட்டுள்ளார். அதற்கு நாகம்மாள் பணம் தர மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் தனது நண்பர் வாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த மருதுபாண்டி(30) என்பவருடன் சேர்ந்து நாகம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது.
2 பேர் கைது
இதையடுத்து பெருகவாழ்ந்தான் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார், மருதுபாண்டி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணத்துக்காக மூதாட்டியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.