தினத்தந்தி புகர் பெட்டி
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
குண்டும், குழியுமான சாலை
நாகை மாவட்டம் திருமருகல் ராராந்திமங்கலம் ஊராட்சி ஆண்டிபந்தல் அருகே வி.கே.என். நிர்மலா நகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சிஅளிக்கிறது. குறிப்பாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கின்றன. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி, இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் குண்டும், குழியுமான சாலையால் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், ஆண்டிபந்தல்.
சமுதாய கூடம் சீரமைக்கப்படுமா?
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் சித்தமல்லி பகுதியில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக சமுதாய கூடம் அமைக்கப்பட்டது. தற்போது சமுதாய கூடம் பராமரிப்பின்றி கிடக்கிறது. இதன் காரணமாக சமுதாய கூடத்தின் மேற்கூரைகள் உடைந்து உள்ளன. மேலும், சமுதாய கூடத்தில் உள்ள கதவுகள், சன்னல்கள் உடைந்து கிடக்கின்றன. மேற்கூரைகள் உடைந்து உள்ளதால் மழைக்காலங்களில் சமுதாய கூடத்துக்குள் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக சமுதாய கூடம் விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் பராமரிப்பின்றி கிடக்கும் சமுதாய கூடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், கோட்டூர்.
சாலை வசதி வேண்டும்
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த சித்தாய்மூர் கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள வயல்வெளிகளுக்கு நடுவே உள்ள மண் சாலையை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் மழைக்காலங்களில் மண்சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், திருக்குவளை.
வடிகால் வசதி செய்துதரப்படுமா?
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை அடுத்த செங்களிபுரம் வி.ஜி.பி.செல்வசிட்டிநகர் பகுதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் அந்த பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும், மழைநீருடன் கழிவுநீர் கலந்து அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர் அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், குடவாசல்.