போக்சோவில் கைதாகி ஜாமீனில் வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பல்லடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவழக்கில் போக்சோவில் கைதாகி ஜாமீனில் வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடம்
பல்லடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவழக்கில் போக்சோவில் கைதாகி ஜாமீனில் வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி கள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 59). கூலித்தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து தனியே வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சண்முகத்தை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
அதை தொடர்ந்து இவர் மீதான போக்சோ வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக அவ்வப்போது கோர்ட்டுக்கு சென்று வந்தார். . இந்தநிலையில் அவரது உறவினர்களிடம் எனக்கு வயது ஆகிவிட்டது முன்புபோல் இருக்க முடியவில்லை. இந்த வழக்கு நடப்பதால் அடிக்கடி கோர்ட்டுக்கு செல்ல வேண்டி இருக்கிறது என மனவருத்தத்துடன் கூறி வந்துள்ளார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று இவரது வீடு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதையடுத்து அக்கம் பக்கம் வசிக்கும் உறவினர்கள் கதவை தட்டிப் பார்த்தனர். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தனர். அப்போது வீட்டினுள் சண்முகம் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சண்முகம் இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.