சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி

சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-11-11 17:51 GMT
க.பரமத்தி
கல்லூரி மாணவர்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, வினோபா தெருவை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மகன் ஜெயகிருஷ்ணன் (வயது 20). இவர் திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய நண்பர் திருப்பூர் மாவட்டம், மங்கலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் அரிச்சந்திரன் மகன் பாண்டி மணி (20). இவர் திருப்பூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 
இந்தநிலையில் மதுரையில் உள்ள நண்பர் திருமண விழாவிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஜெயகிருஷ்ணனும், பாண்டி மணியும் திருப்பூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஜெயகிருஷ்ணன் ஓட்டி வந்தார். 
பலி
க.பரமத்தி பவித்திரம்மேடு அருகே கரூர் -கோவை சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்துகொண்டிருந்த லாரி வலது பக்கமாக திரும்பிய போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் லாரியில் மோதினர். 
இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெயகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். 
டிரைவர் கைது
இதில் பலத்த காயமடைந்த பாண்டிமணி மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிந்து, லாரியை ஓட்டி வந்த கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள கோவில்பட்டியை சேர்ந்த பெரியசாமி (49) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் செய்திகள்