எக்ஸ்பிரசை பயணிகள் ரெயிலாக மாற்ற வேண்டும்
எக்ஸ்பிரசை பயணிகள் ரெயிலாக மாற்ற வேண்டும்;
பொள்ளாச்சி
டிக்கெட் கட்டண உயர்வால் பயணிகள் அவதிப்படுவதால் எக்ஸ்பிரசை, பயணிகள் ரெயிலாக மாற்றி இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ரெயில்கள் இயக்கம்
அகலரெயில் பாதை பணிகளுக்கு பின்னர் கோவை- பொள்ளாச்சி வழித்தடம் வழியாக பொள்ளாச்சி-கோவை, கோவை-மதுரை இடையே பயணிகள் ரெயில்கள் இயக்கப் பட்டன. இதனால் குறைந்த கட்டணத்தில் மக்கள் ரெயிலில் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் கொரோனாவை காரணம் காட்டி பொள்ளாச்சி-கோவை வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு பாதிப்பு குறைந்தும் மீண்டும் ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதை தொடர்ந்து தற்போது மீண்டும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
கூடுதல் கட்டணம்
அதன்படி பொள்ளாச்சி-கோவை, கோவை-பழனி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களாகவும், பாலக்காடு-பொள்ளாச்சி இடையே சிறப்பு பயணிகள் ரெயில்களாகவும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்குவதாக கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டிய இருப்பதால் பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு செல்ல பயணிகள் ரெயிலில் ரூ.15 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயனடைந்தனர்.
பயணிகள் அவதி
இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக பழனிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டது. இதேபோன்று 14-ந் தேதி கோவை-பொள்ளாச்சி, 15-ந் தேதி பொள்ளாச்சி-கோவை இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களாக இயக்குவதால் ஒரு நபருக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
மேலும் பொள்ளாச்சி-பாலக்காடு வழித்தடத்தில் இருந்த ஆனைமலை ரோடு ரெயில் நிலையம் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள ரெயில்வே அட்டவணையில் இல்லை.
மாற்ற வேண்டும்
எனவே ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்தில் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொள்ளாச்சி- கோவை இடையே தற்போது அறிவிக்கப் பட்டு உள்ள எக்ஸ்பிரஸ் ரெயிலை, பயணிகள் ரெயிலாக மாற்றி இயக்க வேண்டும். இல்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.