காட்டுயானைகளை கண்காணிக்க சிறப்பு குழு

கொடைக்கானல் பகுதியில் மலைக்கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட வன அலுவலர் பிரபு கூறினார்.

Update: 2021-11-11 17:35 GMT
கொடைக்கானல்: 

கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை, பாரதிஅண்ணாநகர், அஞ்சுரான் மந்தை, ஐந்துவீடு அருவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களையும், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. இந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  இதனைதொடர்ந்து காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதாக கூறப்படும் பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) பிரபு நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் வனச்சரகர்கள் டேவிட், பழனிகுமார், விஜயன் மற்றும் அலுவலர்கள் சென்றிருந்தனர். 

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  காட்டு யானைகளை கண்காணிக்க 20-க்கும் மேற்பட்ட வனக்காவலர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழுவினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

யானைகள் முகாமிட்டுள்ள இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் காட்டு யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். மலைகிராம விவசாயிகள் வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்