எருமப்பட்டி அரசு பள்ளிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

எருமப்பட்டி அரசு பள்ளிகளில் கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2021-11-11 17:09 GMT
நாமக்கல்:
கலெக்டர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது சமூக இடைவெளியுடன் அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்படுவதை உறுதி செய்தார். பிளஸ்-2 படிக்கும் மாணவிகளின் வருகை பதிவேட்டை பார்வையிட்ட கலெக்டர், பள்ளிக்கு அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவிகளின் விவரங்களை கேட்டறிந்தார்.
பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவிகளும் உயர்கல்வி பயில தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் பள்ளிக்கு வராத மாணவிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று மீண்டும் அவர்கள் பள்ளிக்கு வந்து பாடம் படிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
தண்ணீர் தேக்கம்
பின்னர், எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தில் உணவின் தரத்தை கலெக்டர் சாப்பிட்டு ருசி பார்த்தார். மேலும் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக இடைவெளியுடன் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை கிராமத்தில் பருத்தி, நிலக்கடலை, சோளம் ஆகியவை பயிரிடப்பட்டு உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதை வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, வருவாய்த்துறை ஆவணங்கள், வரைபடங்களை ஒப்பிட்டு விவரங்களை சரிபார்த்தார்.
இந்த ஆய்வுகளின் போது, நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, மாவட்ட கல்வி அலுவலர் ராமன் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்