ஒரு சொட்டு தண்ணீரின்றி வறண்டு காணப்படும் குளங்கள்

விழுப்புரத்தில் தொடர் மழை பெய்தும் ஒரு சொட்டு தண்ணீரின்றி குளங்கள் வறண்டு காணப்படுகின்றன.

Update: 2021-11-11 17:08 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணையாறு, பம்பை ஆறு, மலட்டாறு, வராக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுபோல் ஏரிகள், குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரிக்கத்தொடங்கி அவை வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது, அதுபோல் கிராமப்புறங்களில் உள்ள விவசாய நிலங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இவ்வாறு ஊரே வெள்ளக்காடாக காட்சியளிக்கிற நிலையில் விழுப்புரத்தில் உள்ள குளங்கள் ஒரு சொட்டு தண்ணீரின்றி வறண்ட நிலையில் காணப்படுகின்றன.

தண்ணீரின்றி வறண்டு காணப்படும் குளங்கள்

விழுப்புரம் திரு.வி.க. வீதி, எம்.ஜி.சாலை இடையே உள்ள பழமையான அய்யனார் கோவில் குளத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காமல் அந்த குளம் வறண்டு காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்திற்கு வரும் நீர்வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளன.
இதனால் குளத்துக்கு வரும் மழைநீர் தடைபட்டு அருகே உள்ள காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்திற்கு சென்று அங்கு குளம்போல் தண்ணீர் தேங்கி வருகிறது. ஒவ்வொரு மழைக்காலங்களின்போது இதே நிலைமைதான் இருந்து வருகிறது. இதேபோல் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் பிளாஸ்டிக் குப்பைகளால் புதர்மண்டி கிடந்த குளத்தையும் மீட்டெடுத்து அதனை தூர்வாரி பூங்கா, நடைபாதை வசதியுடன் கூடிய குளமாக புதுப்பொலிவுடன் சீரமைத்து திறக்கப்பட்டது. தற்போது பெய்து வரும் கனமழையினால் அந்த குளத்திலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காமல் குளம் வறண்ட நிலையில் காட்சியளிக்கிறது.
எனவே ஆக்கிரமிப்பில் இருக்கும் நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி விழுப்புரம் நகரில் உள்ள இந்த குளங்களில் மழைநீரை தேக்கி வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து எடுக்க வேண்டுமென நகர மக்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்