நரிக்குறவர், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் நரிக்குறவர், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறியுள்ளார்.

Update: 2021-11-11 17:03 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் சார்பில் நரிக்குறவர், பழங்குடியினர் மற்றும் இதர விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்வது மற்றும் அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் நரிக்குறவர், பழங்குடியினர் மற்றும் இதர விளிம்பு நிலை மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கிராமப்பகுதியிலும் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு அப்பகுதிகளுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்புகளை சம்பந்தப்பட்ட துறைகள் கண்டறிய வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான அரசின் சார்பாக மேற்கொள்ளக்கூடிய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதிச்சான்றிதழ், ஓய்வூதியம், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து கண்டறிய வேண்டும்.

முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற...

ஒவ்வொரு கிராமப்பகுதியிலும் நரிக்குறவர், பழங்குடியினர் மற்றும் இதர விளிம்புநிலை மக்கள் வசிக்கும் பகுதிகளில் மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை, மொத்த மக்கள் தொகை, ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் எண்ணிக்கை, பள்ளி- கல்லூரி செல்பவர்களின் எண்ணிக்கை, வீடு வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, வீட்டுமனைப்பட்டா பெற்றவர்களின் எண்ணிக்கை போன்றவற்றை துறை சார்ந்த அலுவலர்கள் கண்டறிய வேண்டும்.
இப்பணியை சிறப்பாகவும், முதன்மையாக கருதி பணியை மேற்கொள்ள ஒரு தொடர்பு அலுவலருடன் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு நமது மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர், பழங்குடியினர் மற்றும் இதர விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, கோட்டாட்சியர் அரிதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்