குறிஞ்சிப்பாடி அருகே சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி

குறிஞ்சிப்பாடி பகுதியில் பெய்த கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் பலியானார்.

Update: 2021-11-11 17:03 GMT
கடலூர், 

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் இதுவரை 746 வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன. மேலும் மழைக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் பலியாகி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெத்தநாயக்கன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 80). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்தார். அப்போது குறிஞ்சிப்பாடி பகுதியில் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் ஆறுமுகம் வீட்டின் பின்பக்க சுவர் முழுவதும் நனைந்து பலவீனமடைந்திருந்தது.

முதியவர் பலி

இதற்கிடையே திடீரென சுவர் இடிந்து வீட்டில் இருந்த ஆறுமுகம் மீது விழுந்தது. இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, ஆறுமுகம் மீது விழுந்த கட்டிட இடிபாடுகளை அகற்றினர். அப்போது அவர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் விரைந்து வந்து, சுவர் இடிந்து விழுந்து பலியான ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆறுமுகம் மகன் சேகர், குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கனமழையால் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்