கடலூர் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து நிற்கும் தண்ணீர்
கடலூர் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
கடலூர்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதையொட்டி கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது சென்னைக்கு அருகில் சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகவும், இது வட சென்னைக்கும், ஆந்திரா மாநிலம் நெல்லூருக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கடலூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை விட்டு, விட்டு மழை பெய்தது. நேற்று காலை சற்று மழை ஓய்ந்து இருந்தது. பின்னர் மதியம் 12.30 மணிக்கு பிறகு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு, விட்டு சாரல் மழையாக பெய்தபடி இருந்தது.
தண்ணீர் சூழ்ந்துள்ளது
இந்த தொடர் மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் புகுந்தது. கடலூர் வில்வநகர், அங்காளம்மன் கோவில் தெரு, வண்ணாங்குட்டை, தானம்நகர், கே.கே.நகர், நவநீதம்நகர், பத்மாவதிநகர், ராஜம்நகர், வன்னியர்பாளையம், மரியசூசைநகர், வண்ணாரப்பாளையம், கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான இடங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஒரு சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அந்த தண்ணீர் தற்போது வடிந்து வருகிறது.
இருப்பினும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது.
இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இருகரைகளையும் தொட்டப்படி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புவனகிரியில் 60 மில்லி மீட்டர் மழை பெய்தது. குறைந்தபட்சமாக குப்பநத்தத்தில் 3.6 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 28.51 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.