அணைகளின் கொள்ளளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்

அணைகளின் கொள்ளளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2021-11-11 16:59 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், முதன்மை செயலருமான (தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி) ஹர்சகாய் மீனா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா பேசியதாவது:- கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர்கள் மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை ஆய்வு செய்து, அங்கு, பாதுகாப்பு மையங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும், பொதுவினியோக திட்ட பொருட்களை போதிய அளவில் இருப்பு வைத்து இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
 உடைப்பு ஏற்படாமல் இருக்க அணைகள் மற்றும் ஏரியின் கொள்ளளவை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். சுகாதாரத்துறையினர் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்று நோய்கள், டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதேபோல் அனைத்து துறை அதிகாரிகளும் மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டாமல் இருக்க ஒருங்கிணைந்து முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

இயற்கை இடர்பாடு

மேலும்  பருவமழை அல்லது இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க ஏதுவாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04151-228801 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 வடகிழக்கு பருவமழையினால் ஏற்படக்கூடிய சேதங்கள் குறித்த தகவல்கள் கட்டுப்பாட்டு அறைக்கு பெறப்பட்டவுடன் தொடர்புடைய அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து உடனடியாக களப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்வது, குளிப்பது மற்றும் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், வருவாய் கோட்டாட்சியர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்