பம்பை ஆற்றின் கரை உடைந்து 500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
ிழுப்புரம் மாவட்டத்தில் விடிய, விடிய பரவலாக மழை பெய்தது. பம்பை ஆற்றின் கரை உடைந்தால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமானது. தரைப்பாலங்களும் மூழ்கியதால் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 10 மணியில் இருந்து சாரல் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரமாக தூறிக்கொண்டே இருந்த நிலையில் 11 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழையாக பெய்யத்தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு நள்ளிரவில் இருந்து நேற்று காலை வரை விடிய, விடிய பரவலாக சாரல் மழையாக தூறிக்கொண்டே இருந்தது.
தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது
தொடர்ந்து நேற்று காலையிலும் நீடித்த மழை 9 மணி வரை இடைவிடாது பெய்து அதன் பிறகு சற்று ஓய்ந்தது. இதேபோல் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாணவ- மாணவிகளின் நலனை கருதி அனைத்து பள்ளி- கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த மழையினால் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள வி.ஐ.பி. கார்டன், வழுதரெட்டி, பெரியகாலனி, தாமரைக்குளம், கே.கே.சாலை அண்ணாநகர், தேவநாதசாமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். உடனே நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மின் மோட்டார் மூலம் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றினர்.
தரைப்பாலங்கள் மூழ்கின
வெள்ளப்பெருக்கால் பெரும்பாக்கம், வேடம்பட்டில் உள்ள தரைப்பாலங்களை நேற்று மூழ்கடித்தபடி தண்ணீர் ஆர்ப்பரித்துச்சென்றது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களுக்கு வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பெரும்பாக்கம், சின்னபாபுசமுத்திரம், உள்ளிட்ட இடங்களில் உள்ள விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பம்பை ஆற்றின் கரை உடைந்தது
விழுப்புரம் அருகே குமளத்தை அடுத்த நகரி மாத்தூர் பகுதியில் உள்ள பம்பை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதன் காரணமாக இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையின் கரை உடைந்தது. இதனால் ஆற்றின் கரையோர வயல்வெளியில் வெள்ளம் புகுந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையும் அடித்துச்செல்லப்பட்டது. பம்பை ஆற்றின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதமானது.
செஞ்சி அருகே சென்னாலூர் பெரிய ஏரி நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் செல்ல வாய்க்கால் வசதி இல்லாததால் 100 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.
இதேபோல் திண்டிவனம், மரக்காணம், வானூர், ஆரோவில், கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், செஞ்சி, மேல்மலையனூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
மழை அளவு
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
மரக்காணம்- 97
கஞ்சனூர்- 68
சூரப்பட்டு- 53
மணம்பூண்டி- 51
கெடார்- 49
திண்டிவனம்- 49
முகையூர்- 49
வளவனூர்- 45
முண்டியம்பாக்கம்- 44
விழுப்புரம்- 43.60
கோலியனூர்- 40
வானூர்- 40
வல்லம்- 39.60
நேமூர்- 39
அனந்தபுரம்- 38
வளத்தி- 31
செஞ்சி- 30
செம்மேடு- 23.60
அவலூர்பேட்டை- 19.50
அரசூர்- 5
திருவெண்ணெய்நல்லூர்- 4