முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தமிழக உரிமையை தி.மு.க. எப்போதும் விட்டு கொடுக்காது அமைச்சர் இ.பெரியசாமி பேட்டி
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை தி.மு.க. எப்போதும் விட்டு கொடுக்காது என்று அமைச்சர் இ.பெரியசாமி பேட்டி அளித்தார்.
தேனி :
தேனி ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தில் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் வரவேற்றார். இதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடிநீர் வினியோகம், தெருவிளக்கு, புதிய குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள், கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள், முதல்-அமைச்சரின் பசுமை வீடுகள் திட்டம், பிரதம மந்திரியின் வீடுகள் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்களை சேர்த்து அதிக அளவில் கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தி.மு.க. எப்போதும் தமிழக உரிமையை விட்டு கொடுக்காது. ரேஷன்கடைகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பனை வெல்லம் தயாரிக்க கூடிய விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் முல்லைப்பெரியாறு அணை தமிழகத்திற்கே சொந்தம். முல்லைப்பெரியாறு அணையில் இருக்கும் நமது உரிமைகளை நாமே கேள்வி கேட்பது என்பது தவறானது. கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிகழ்வை அரசியலாக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வு கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன்(கம்பம்), மகாராஜன்(ஆண்டிப்பட்டி), சரவணகுமார்(பெரியகுளம்) மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.