கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
மழை வெள்ளத்தை வடிய வைக்கக்கோரியும், நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
வந்தவாசி
மழை வெள்ளத்தை வடிய வைக்கக்கோரியும், நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
மழை வெள்ளம்
வந்தவாசிைய அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தில் மழைவெள்ளம் தேங்கியது. அங்குள்ள வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து புகுந்தது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தை வடிய வைக்கக் கோரி கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை, எனக் கூறப்படுகிறது.
எனவே கிராமத்தில் தேங்கிய மழை வெள்ளத்தை வடிய வைக்கக் கோரியும், நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், வந்தவாசி-திண்டிவனம் சாலையில் அமர்ந்து கிராம மக்கள் பலர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், ராஜ்விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ரவி, குப்புசாமி ஆகியோரும் நேரில் வந்து கிராம மக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
கிராமத்தில் தேங்கி நிற்கும் மழை வெள்ளத்தை வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதும், சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். சாலை மறியலால் இன்று பகல் 11 மணியில் இருந்து 12 மணிவரை ஒரு மணிநேரம் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.