வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்-முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் அறிவுறுத்தினார்.;

Update: 2021-11-11 15:40 GMT
தர்மபுரி:
வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த  ஆய்வு கூட்டத்தில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் அறிவுறுத்தினார்.
நிவாரண பணிகள்
தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரசு முதன்மை செயலாளர் மற்றும் தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் தலைமை தாங்கினார். கலெக்டர் திவ்யதர்சினி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். 
வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு எந்தவித சிரமமுமின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வேளாண் பயிர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சேதம் ஏற்படாமல் தடுக்கவும் உரிய முன்னேற்பாடு பணிகளை செய்வது குறித்து விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
தங்கும் முகாம்கள்
மாவட்டத்தில் உள்ள அணைகள், தடுப்பணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் மழைக்காலங்களில் நிரம்பும்போது அதன் உபரி நீரை வெளியேற்றுவதற்கு முன் பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை தண்டோரா, ஒலிபெருக்கி போன்றவற்றின் மூலம் முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். நீர்நிலைகளின் அருகில் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மழைக்காலங்களில் வெள்ள நீர் வெளியேறுவதை தடுப்பதற்கு ஏதுவாக மண் மணல், மணல் பை போன்றவற்றை தேவையான அளவில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்கும் பகுதிகளில் உடனுக்குடன் தண்ணீரை வெளியேற்ற தேவையான எந்திரங்கள், மர அரவை எந்திரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 
மழை வெள்ள நீரால் பாதிப்புக்குள்ளாகும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைக்க தேவையான முகாம்கள், குடிநீர், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை தேவையான அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அணைகளில் ஆய்வு
கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பிரதம மந்திரி இ- சராம் திட்டத்தில் 10 பேருக்கு அடையாள அட்டை, 15 பேருக்கு ஓய்வூதியர்களுக்கான ஆணை, 5 பேருக்கு கல்வி உதவித்தொகை ஆகியவற்றை அவர் வழங்கினார். இதைத்தொடர்ந்தது வாணியாறு அணை, ஈச்சம்பாடி தடுப்பணை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு அந்த அணைகளில் நீரின் அளவு மற்றும் உபரி நீர் வெளியேற்றம் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வு மற்றும் கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர்கள் சித்ரா விஜயன், முத்தையன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராஜன், மேல் பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் பிரபு, பரிமளா, தொழிலாளர் உதவி ஆணையர் இந்தியா, தாசில்தார்கள் சுப்பிரமணி, சின்னா உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்