பாலக்கோடு அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்-விவசாய பயிர்களை சேதப்படுத்தியது
பாலக்கோடு அருகே ஊருக்குள் காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்தது. காட்டு யானை விவசாய பயிர்களை மிதித்ததில், ராகி, பச்சை மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன.
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே ஊருக்குள் காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்தது. காட்டு யானை விவசாய பயிர்களை மிதித்ததில், ராகி, பச்சை மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன.
காட்டு யானை
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியான ராயக்கோட்டை, மாரண்டஅள்ளி வனப்பகுதிகளில் யானைகள் முகாமிட்டு உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில் நேற்று பஞ்சப்பள்ளி வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் காட்டு யானை ஒன்று சுற்றி திரிவது தெரியவந்தது. இதையடுத்து பாலக்கோடு வனச்சரகர் செல்வம் தலைமையிலான வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 40 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று மாரண்டஅள்ளி, அமானி மல்லாபுரம், நல்லூர், கரகூர், பெல்ரம்பட்டி, சீங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் நுழைந்து சுற்றித்திரிந்தது. ஊர்களுக்குள் நுழைந்த அந்த யானை நெல், ராகி, தக்காளி, பச்சை மிளகாய் உள்ளிட்ட பயிர்களை மிதித்து அட்டகாசம் செய்தது. இதனால் பயிர்கள் பெரும் சேதம் அடைந்தன.
பட்டாசு வெடித்து விரட்டினர்
இது குறித்து பாலக்கோடு வனச்சரகர் செல்வத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, உடனடியாக அங்கு வந்த வனச்சரகர், வனக்காவலர்கள் மற்றும் கிராம மக்கள் மேளம் அடித்தும், பட்டாசு வெடித்தும் அந்த காட்டு யானையை கரகூரையொட்டி உள்ள காப்பு காட்டுக்குள் விரட்டி விட்டனர்.
பாலக்கோடு பகுதியில் ஊருக்குள் திடீரென புகுந்த காட்டு யானையால் கிராம மக்களிடையே அச்சமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.