தடுப்பூசி போட்டால் பிரிட்ஜ், வாஷிங் மெசின், டி.வி. பரிசு- சந்திராப்பூர் மாநகராட்சி அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி போட்டால் பிரிட்ஜ், வாஷிங் மெசின் மற்றும் டி.வி. பரிசாக வழங்கப்படும் என சந்திராப்பூர் மாநகராட்சி அறிவித்து உள்ளது.

Update: 2021-11-11 15:02 GMT
கோப்பு படம்
மும்பை, 
கொரோனா தடுப்பூசி போட்டால் பிரிட்ஜ், வாஷிங் மெசின் மற்றும் டி.வி. பரிசாக வழங்கப்படும் என சந்திராப்பூர் மாநகராட்சி அறிவித்து உள்ளது.

100 சதவீதம் போட நடவடிக்கை

மராட்டியத்தில் 10 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. மாநிலத்தில் தடுப்பூசி போட தகுதியானவர்களில் சுமார் 75 சதவீதம் போ் முதல் டோஸ் போட்டு உள்ளனர். 35 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுவிட்டனர். இந்தநிலையில் இந்த மாதத்திற்குள் 100 சதவீதம் பேருக்கு முதல் டோசை போட்டு முடிக்க மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாக்பூரில் அடுத்த மாதம் முதல் இலவசமாக முதல் டோஸ் தடுப்பூசி போடுவதை நிறுத்த மாநகராட்சி பரிசீலித்து வருகிறது. இதேபோல கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், கியாஸ், பெட்ரோல் கிடையாது என அவுரங்காபாத் மாவட்ட கலெக்டர் சுனில் சவான் அறிவித்து இருந்தார்.

பிரிட்ஜ், டி.வி. பரிசு

இந்தநிலையில் தடுப்பூசி போட மக்களை ஊக்கப்படுத்தும் வகையில், தடுப்பூசி போடும் மக்களுக்கு எல்.இ.டி. டி.வி., வாஷிங் மெசின், பிரிட்ஜ் பரிசாக வழங்கப்படும் என சந்திராப்பூர் மாநகராட்சி அறிவித்து உள்ளது. 
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் மோகிதே கூறுகையில், ‘‘சந்திராப்பூரில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 24-ந் தேதி வரை தடுப்பூசி போடும் மக்களுக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசாக பிரிட்ஜ், 2-வது பரிசாக வாஷிங் மெசின், 3-வது பரிசாக எல்.இ.டி. டி.வி. வழங்கப்படும். 10 பேருக்கு ஆறுதல் பரிசாக கிரைண்டர் வழங்கப்பட உள்ளது. 
எனவே பொதுமக்கள் அவர்களின் வீட்டருகே உள்ள மையங்களில் தடுப்பூசி போட்டு கொண்டு பரிசுகளை பெறலாம்” என்றார்.

மேலும் செய்திகள்