மழை பாதிப்பு தடுப்பு பணிகளை கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு

மழை பாதிப்பு தடுப்பு பணிகளை கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு

Update: 2021-11-11 14:23 GMT
கோவை

கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு தடுப்பு பணிகளை கண் காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கண்காணிப்பு அதிகாரிகள்

கோவை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு தடுப்பு பணிகளை கண்காணிக்க கண்காணிப்பு அதி காரிகளாக தேசிய நலக்குழும மேலாண்மை இயக்குனர் தாரேஸ் அகமது, கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. வன்னிய பெருமாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள், கோவை கலெக்டர் சமீரனுடன் சென்று மழை வெள்ள பாதிப்பு தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். வாலாங்குளத்தில் வெள்ள நீர் சாலையில் வழிந்து ஓடுவது குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்னர் கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள பெரியகுளங்கள், முக்கிய நீர்நிலை களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அங்கு செய்யப்பட்டு உள்ள பணிகள் மேற்பார்வையிடப்பட்டது. 

மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் மருத்துவ முகாம்களை கண்காணிப்பாளர்கள் பார்வை யிட்டனர். வானிலை ஆய்வு மையம் கோவைக்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கி உள்ளது. 

ஆனாலும் எதிர்பார்த்த மழை இல்லை. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தயார் நிலை

கோவை மாவட்ட காவல்துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். நொய்யல் ஆறு மூலம் தண்ணீர் பெறும் 25 குளங்களில் 23 குளங்கள் 100 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளது. 2 குளங்கள் 90 சதவீத அளவை எட்டியுள்ளது. 

குளங்களில் நிறைந்து வெளியேறும் உபரிநீர் மீண்டும் நொய்யல் ஆற்றில் கலக்க செல்லும் பாதைகளில் உள்ள அடைப்புகள் மற்றும் உடைப்புகள் சரி செய்யப்பட்டு உள்ளது.

 கோவை- திருச்சி சாலையில் 600 அடி நீளத்திற்கு குளத்தில் இருந்து அதிக அளவு உபரிநீர் வெளி யேறி சாலையில் சென்றது. இரவோடு இரவாக அந்த அடைப்புகள் சரி செய்யப்பட்டது. தற்போது சீரான அளவு நீர் செல்கிறது. 

கண்காணிக்க குழு

ஆழியாறு மற்றும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து வரும் நீர் தாழ்வான பகுதிகளில் தேங்க வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

சாலைகளில் தேங்கும் நீரை கண்காணிக்கவும், அகற்றவும் மாநகராட்சி ஊழியர்களுடன் நெடுஞ்சாலைத் துறையினரும், குளங்களை கண்காணிக்க பொதுப் பணித் துறையினரும், 

போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய காவல் துறையினரும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை மாநகராட்சியில் 24 மணி நேரமும் கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. சித்திரைச்சாவடி அணை, பில்லூர் அணை, போன்ற பகுதிகளில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால், 

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது. 

செல்பி எடுக்க கூடாது

ஏற்கனவே கோவை குற்றாலத்திற்கு செல்ல வனத்துறையால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

நீர்நிலைகளில் குளிக்கவோ அல்லது செல்பி எடுத்தாலோ ஏதேனும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அது போல் செய்பவர்களை கண்காணிக்க பறக்கும் படை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சாலைகளில் தேங்கும் நீரை அகற்ற மாநகராட்சியின் முக்கியமான சாலைகளில் 20 எச்.பி திறன் கொண்ட மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சிறிய நீர் தேக்கத்தில் தண்ணீரை வெளியேற்ற சிறு வாய்க்கால் வெட்ட தேவையான உபகரணங்கள்  தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்