செங்குன்றம் அருகே வெள்ளத்தில் சிக்கித்தவித்த 37 பேர் மீட்பு - தீயணைப்பு வீரர்கள் துணிச்சல் நடவடிக்கை
செங்குன்றம் அருகே வெள்ளத்தில் சிக்கித்தவித்த 37 பேரை தீயணைப்பு வீரர்கள் மீ்ட்டனர்.
சென்னை,
சென்னை அசோக்நகர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கபாதை, கொளத்தூர் ஜவஹர்நகர், பெரியார் நகர் ஆகிய இடங்களில் நடைபெறும் மீட்புப்பணிகளை தீயணைப்புத்துறை இயக்குனர் கரன் சின்ஹா நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினார்.
இந்தநிலையில் செங்குன்றம் காரனோடை அருகில் உள்ள கோட்டைமேடு கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் வெள்ளநீர் தீவுபோல் சூழ்ந்தது. 16 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் குடியிருப்புகளை விட்டு வெளியே வர முடியாமல் சிக்கி இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் தீயணைப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக தீயணைப்புத்துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் சென்னை மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த நீச்சல் பயிற்சி பெற்ற தீயணைப்புத்துறை கமாண்டோ படைவீரர்கள் 55 பேர் அங்கு விரைந்து வந்தனர். இரவு நேரத்தில் மோட்டார் படகுகள் மூலம் சென்று 4 ஆண்கள், 2 பெண்கள் உள்பட 6 பேரை பாதுகாப்பாக மீட்டனர். ஆனால் மற்றவர்கள் வெளியேற மறுத்துவிட்டனர். அங்கு வெள்ளநீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்ததால் தீயணைப்பு வீரர்கள் முகாமிட்டனர்.
இந்தநிலையில் அதிகாலை வேளையில் 12 ஆண்கள், 8 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் என அனைவரையும் மீட்டு மோட்டார் படகுகள் மூலம் பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர். இப்பணியில் உதவி மாவட்ட அலுவலர்கள் தனபால், சந்திரகுமார் ஆகியோரும் உறுதுணையாக இருந்தனர்.