தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மழை காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு

தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.

Update: 2021-11-11 00:56 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக காய்கறிகள் விலை கிடுகிடுெவன உயர்ந்து உள்ளது.
விலை உயர்வு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் காய்கறிகளின் அறுவடை மற்றும் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வரத்து வழக்கத்தை விட குறைந்துள்ளது. காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.54-க்கு விற்பனையானது. பீன்ஸ் ரூ.62-க்கும், கேரட் ரூ.64-க்கும் விற்பனை செய்யப்பட்டன. நூல்கோல் வரத்து கணிசமாக குறைந்ததால் ஒரு கிலோ ரூ.72- க்கு விற்பனை செய்யப்பட்டது.
கூடுதல் விலை
இதேபோல் கத்தரிக்காய் ரூ.38, வெண்டைக்காய்- 26, கோழிஅவரை ரூ.40, முள்ளங்கி-20, பீர்க்கங்காய்-28, சின்ன வெங்காயம்- ரூ.35-முதல் ரூ.40, உருளைக்கிழங்கு- ரூ.32, பீட்ரூட்- ரூ.36, முட்டைகோஸ்- 22 என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று கீரைகளின் விலையும் சற்று அதிகரித்தது.
உழவர் சந்தை விலையை ஒப்பிடும்போது வெளிமார்க்கெட்டுகளில் காய்கறிகள் சற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. காய்கறிகள் திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காய்கறிகள் வரத்து அதிகரித்தால் அவற்றின் விலை மீண்டும் குறையும் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்