வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 வயது சிறுமி-மூதாட்டி பலி
கும்பகோணம், மன்னார்குடியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 வயது சிறுமியும், மூதாட்டியும் பலியானார்கள்.
கும்பகோணம், நவ.11-
கும்பகோணம், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 வயது சிறுமி பலியானார்கள்.
தொடர் மழை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
தொடர் மழை காரணமாக நகரில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி சாகுபடி நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது
கும்பகோணத்தை அடுத்து உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை சுற்றி மழை நீர் தேங்கி இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கடும் அவதி அடைந்துள்ளனர். கோவிலை சுற்றி அமைந்துள்ள புல் தரை மற்றும் அகழியில் நிரம்பி உள்ள மழைநீர் கோவிலின் உள்ளேயும் புகுந்து பிரகாரம் முழுவதும் தேங்கியுள்ளது. இதனால் கோவிலினுள் பக்தர்கள் சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கோவில் வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் பம்பு உதவியுடன் வெளியேற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீரை முழுவதுமாக வெளியேற்றுவதில் சிக்கல் நிலவுகிறது.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 வயது சிறுமி பலியானாள். அவளது தந்தை படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அதன் விவரம் வருமாறு
வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
கும்பகோணம் அருகே உள்ள தேனாம்படுகை வடக்கு தெருவை சேர்ந்தவர் கவுதமன்(வயது 28). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர் தனது மனைவி விஜயபிரியா(25), மகள்கள் அனன்யா(4), அஜிதா(1) ஆகியோருடன் தொகுப்பு வீட்டின் பின்புறம் மண்சுவரால் கட்டப்பட்ட வீட்டில் படுத்து தூங்கினார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து கவுதமன் மற்றும் அவரது 4 வயது குழந்தை அனன்யா ஆகியோர் மீது விழுந்தது. இதில் கவுதமனும், அனன்யாவும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
சிறுமி பலி
உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அனன்யா பரிதாபமாக இறந்தாள். கவுதமன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.