மேட்டூர் அணையில் கூடுதல் டி.ஜி.பி.அபய்குமார் சிங் நேரில் ஆய்வு

மேட்டூர் அணையில் கூடுதல் டி.ஜி.பி.அபய்குமார் சிங் நேரில் ஆய்வு

Update: 2021-11-10 20:11 GMT
மேட்டூர், நவ.11-
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியில் நீடிக்கிறது. அணையை கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.
மேட்டூர் அணை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் அதிகாலையில் அணையின் நீர்மட்டம் 119 அடியை எட்டியது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26 ஆயிரத்து 440 கன அடியாக இருந்தது. இதனால் அணை விரைவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அணைக்கு வரும் நீர்வரத்து திடீரென அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டது.
நீர்வரத்து குறைந்தது
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் திறந்து விடப்பட்டது. 
இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து நேற்று திடீரென குறைந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 26 ஆயிரத்து 440 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 21 ஆயிரத்து 27 கனஅடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.
19 ஆயிரம் கனஅடியாக 
நேற்று காலை 10 மணி முதல் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியில் இருந்து 19 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரத்து 263 கன அடியாக இருந்தது. 
இந்த நிலையில் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு மாலையில் 20 ஆயிரத்து 413 கனஅடியாக இருந்தது. இரவு உபரிநீர் வெளியேற்றம் மீண்டும் வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. மேலும் கால்வாய் பாசனத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு
இதற்கிடையே மழை வெள்ள கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள சேலம் மாவட்டத்துக்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டார். அவர், நேற்று மேட்டூர் அணைக்கு வந்தார். அங்கு அணையின் வலது கரை, இடதுகரை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் நீர்வரத்து, வெளியேற்றம், அணையின் பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அவருடன் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா, சேலம் சரக டி.ஐ.ஜி. மகேசுவரி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் சாந்தகுமார், மேட்டூர் பொதுப்பணித்துறை நிர்வாக என்ஜினீயர் தேவராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பேரிடர் மீட்பு குழு
ஆய்வுக்கு பிறகு, கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அபய்குமார் சிங் நிருபர்களிடம் கூறுகையில், நிரம்பும் தருவாயில் உள்ள மேட்டூர் அணையை பார்வையிட்டுள்ளேன். தற்போது 119 அடியில் தண்ணீரை பராமரித்து வருகின்றனர். வரும் நாட்களில் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் அணையில் கூடுதல் தண்ணீர் திறந்துவிடவும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் மழைவெள்ளம் பாதிப்பு உள்ள 24 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மழைவெள்ளத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்