கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி

கந்தசஷ்டி விழாவையொட்டி கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2021-11-10 20:05 GMT
ஆண்டிமடம்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம்-விளந்தையில் வள்ளி தெய்வானை சமேத அழகு சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சூரசம்ஹார திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றப்பட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் இரவு ரிஷபம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து நேற்று முருகப்பெருமானுக்கு மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து முக்கிய நிகழ்வான சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் யானைமுகம் கொண்ட தாரகாசுரனை முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். பின்னர் சிங்கம் முகமாகவும், தன் முகமாகவும் அடுத்தடுத்து உருமாறிய தாரகாசுரனை முருகப்பெருமான் வதம் செய்தார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறிய தாரகாசுரனை சேவல் மயிலாக மாறி முருகப்பெருமான் தன்னுடன் ஆட்கொண்டார் சேவலை தனது கொடியாகவும் மயிலை தனது வாகனமாகவும் மாற்றி சுவாமி ஆட்கொண்டார். விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அரோகரா பக்தி கோஷமிட்டு வணங்கினர்.
திருக்கல்யாணம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு தட்டார தெருவில் அமைந்துள்ள முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை உள்ளிட்ட தெய்வங்களுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பிறகு சுவாமி திருவீதி உலா நடந்தது.
இதேபோல தா.பழூர் சிவாலயத்தில் நேற்று எழுந்தருளிய கல்யாண சுப்பிரமணியருக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மணமக்களுக்கு பக்தர்கள் சீர்வரிசை கொண்டு வந்தனர். வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கல்யாண சுப்பிரமணியருக்கும் தேவானைக்கும் பிரகாரத்தில் மணமக்கள் அழைப்பு நடைபெற்றது. 

மேலும் செய்திகள்